அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆசிரிய இடமாற்ற சபையை உடனடியாக கலைத்து 12,500 ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு விடுத்த உத்தரவுக்கு இலங்கை ஆசிரியர் சஙகம் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,
தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற சபையை கலைக்கும் திடீர் தீர்மானத்துக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டார்.
கலந்துரையாடலுக்கு கல்வி அமைச்சர் அழைப்பு
ஆசிரியர் இடமாற்ற சபையை கலைக்கும் தீர்மானத்துக்கு எதிராக ஏழு பாடசாலைகளின் அதிபர்கள் முறைப்பாடு செய்ததாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சில் நாளை (20) இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கல்வி அமைச்சர், அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அமைச்சுக்கு அழைத்துள்ளார் என்றும் கூட்டத்தில் ஒருங்கிணைந்த முடிவு எடுக்கப்படாவிட்டால், 7 ஆயிரம் ஆசிரியர்களின் ஆதரவுடன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.