ரஷ்யா மற்றும் உக்ரைன் ஊடகங்களுக்கிடையே பனிப்போர்
ரஷ்ய சித்திரவதை கூடத்திலிருந்து இலங்கையைச் சேர்ந்த 07 மாணவர்களை மீட்டதாக உக்ரைன் அதிபர் வெலோடிமர் ஸெலன்ஸ்கி அறிவித்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஊடகங்களுக்கிடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் அறிவித்த போதிலும் அவர்கள் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் உக்ரைன் ஊடகவியலாளர் மரியா ரோமானென்கோ தமது டுவிட்டர் பக்கத்தில் குறித்த ஆறு இலங்கையர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு உக்ரைனுக்கு வந்தவர்கள்
20 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த ஏழு மாணவர்களில் 6 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு உக்ரைனுக்கு வந்தவர்கள் என்றும் உக்ரைன் ஊடகவியலாளர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வேலை மற்றும் படிப்புக்காக உக்ரைனில் இருந்த ஏழு (7) இலங்கையர்கள் ரஷ்யர்களால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் மரியா ரோமானென்கோ தெரிவித்துள்ளார்.
கார்கிவ் பிராந்திய காவல்துறையினரை மேற்கோள் காட்டி, இலங்கையர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர்களின் நகங்கள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யர்களால் இலவசமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டனர்
இவர்கள் சில நாட்களுக்கு முன்பு வரை ஆக்கிரமிக்கப்பட்ட குபியன்ஸ்கில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தனர். மேலும் அவர்கள் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் வரை சில காலம் தங்கள் வீட்டில் ஒளிந்து கொண்டிருந்தனர்.
எனினும், அவர்கள் கார்கிவ் நகருக்கு செல்லும்போது கடக்க முயன்ற முதல் ரஷ்ய சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டனர்.
ரஷ்யர்கள் அவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு தெரியாத திசையில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அது வோவ்சான்ஸ்க் என்று தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு வரை அந்தப்பகுதியிலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என ரோமானென்கோ கூறினார்.
கார்கிவ் நகருக்கு நடந்து செல்ல முயற்சி
உக்ரைன் படையினரால் பிரதேசங்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், 7 இலங்கையர்களும் மீண்டும் கார்கிவ் நகருக்கு நடந்து செல்ல முயன்றதாக ஊடகவியலாளர் மேலும் தெரிவித்தார்.
“அவர்கள் செல்லும் வழியில் ஒரு ஹோட்டலைக் கண்டதும், அங்கிருந்த காவலர் அவர்களை அழைத்துச் சென்று, அவர்களைக் கவனித்து, காவல்துறையை அழைத்தார்,” என்று அவர் மேலும் கூறினார்.
07 இலங்கையர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்த மரியா ரோமானென்கோ, கார்கிவ் பிராந்திய காவல்துறையினர் அவர்களின் வழக்கை விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
ரஷ்யா குற்றச்சாட்டு
இதேவேளை சர்வதேச சமூகத்தை ரஷ்யாவின் இராணுவ சிவிலியன் ஆட்சிக்கு எதிராகத் தூண்டும் முயற்சி என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ரஷ்யாவின் இராணுவ சிவிலியன் ஆட்சியின் தலைவர் விட்டலி கஞ்சேவ்வை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகமான டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மாணவர்களை உக்ரைனிய சிறப்புப் படைகள் தடுத்து வைத்ததாகவும் போரில் வெற்றி பெற உக்ரைன் மக்களின் உயிரைப் பணயம் வைத்து வருவதாகவும் விட்டலி குற்றம் சுமத்தியுள்ளார்.
7 இலங்கை மாணவர்களையும் ரஷ்யப் படைகள் தடுத்து வைத்துள்ளதாக உக்ரைனிய ஊடகங்கள் குற்றம் சுமத்துகின்ற போதும், உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் மீது ரஷ்ய ஊடகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.