தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அரசியல் செய்யவில்லை என தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன் பேணும் அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கல்வி தரப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்பட்டமையால் எனது திசைமாறி சட்டக்கல்லூரிக்கு சென்றேன். அன்று நான் சட்டக்கல்லூரி சென்றிருக்கா விட்டால் உங்களில் ஒருவனாக இங்கு இருந்திருப்பேன். இல்லையென்றால் இறுதி போரில் இறந்து இருப்பேன். இது தான் உண்மை.
முதலாவது தமிழ்த் தலைவர்
உங்களுடைய வேதனை, உங்களது துயரம், துன்பம் அவற்றை நான் 47 ஆண்டுகளாக உணர்ந்துள்ளேன். 1989 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது நான் சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவனாக இருந்தேன்.
அப்போது எதிர்கட்சி தலைவராக முதன் முதலாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர் தான் அமிர்தலிங்கம். பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கான திகதி குறிப்பிட்டிருந்த நிலையில் அவருடன் பேசியிருந்தோம். அப்போது நாங்கள் இளைஞர்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம் வருகிறது. அதனை எதிர்க்க வேண்டும். அது இளைஞர்களை பாதிக்கும் என அவரிடம் கூறினோம். ஆனால் அவர்கள் அதை எதிர்க்கவில்லை. அது வேறு விடயம்.
இப்பொழுது போராளிகள் நலன்புரி சங்கம் உருவாக்கப்படுகிறது.
இந்த போராளிகள் போராடியது, அவர்களது இழப்புக்கள் எல்லாம் அவர்களது சொந்த நன்மைக்காக இல்லை என்பதை எமது சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒதுக்கப்பட்ட முன்னாள் போராளிகள்
எந்த மண்ணுக்காக, தாய்மொழிக்காக, இனத்துக்காக போராடினார்களோ அவர்கள் இப்போது மறந்து விட்டார்கள். இது தான் உண்மை. அவர்களது நிலைப்பாட்டை அறிய வேண்டும்.
ஓவ்வொருவரும் கைது செய்யப்படும் போது அவர்களது பெற்றோர், சகோதரர்கள் கதைகளை 40 வருடங்களாக கேட்டிருக்கிறேன்.
அவர்களின் துன்பம் எனக்கு தெரியும். இந்தப் போராளிகள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்றே நான் கருதுகின்றேன்.
அவர்களது தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும். இது அரசியல் அல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அரசியல் செய்யவில்லை.
அழிவடையும் தமிழர் கலை, கலாசாரம்
நீங்கள் அரசியல்
செய்யவில்லை. அம்பாறை பறிபோய்விட்டது. வவுனியா, முல்லைத்தீவு என எமது மண்ணை இழந்து கொண்டு போகிறோம்.
எங்கள் மண் இழக்கப்படுமாக இருந்தால் எங்களது மொழி, கலை, கலாசாரம் அழியும். இதைப் பாதுகாக்கவா நீங்கள் போராடினீர்கள்.
முன்னாள் போராளிகளான இந்த சங்கத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். எங்களுக்காக, உரிமைக்காக போராடியவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
எனது மனைவி இப்போது உயிருடன் இல்லை. கௌரி சங்கரி அறக்கட்டளை நிறுவி எமது இனத்திற்காக உதவி செய்வேன்” எனத் தெரிவித்தார்.