இலங்கை கடும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் நிலையில், பல்வேறு வகையிலும் நிதி திரட்டலுக்கான வழிகளை கையாண்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல், தத்தளித்து வரும் சூழல் இருந்து வருகின்றது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உலகளாவிய சட்ட நிறுவனமான கிளிஃபோர்ட் சான்ஸ் தெரிவிக்கையில்,
“இலங்கையின் அண்மை காலத்திலான பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, சிறிலங்காவின் வெளி கடன் வழங்குநர்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பொருளாதார முறைகேடு காரணமாக சிக்கித் தவிக்கும் சிறிலங்கா
அதேவேளை இது தொடர்பான விளக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை, கொவிட் -19 தொற்று, பொருளாதார முறைகேடு, மோசமான பொருளாதார நெருக்கடி, கடன் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றது.
குறிப்பாக அத்தியாவசிய உணவு பொருட்கள், எரிபொருட்கள், மருத்துவ பொருட்கள் என போதிய அளவுக்கு இறக்குமதி செய்யக் கூட முடியாமல் தத்தளித்து வருகின்றது.
இதற்கிடையில் பொருளாதார பிரச்சனையானது அரசியல் பிரச்சனையாகவும் மாறியது. இதனால் தலைநகரில் போராட்டம் வெடிக்கவே சிறிலங்காவின் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறினார்.
வன்முறைகள் சிக்கல்களுக்கு மத்தியில் பதவியேற்ற ரணில்
பல வன்முறை சம்பவங்கள் அந்த சமயத்தில் அரங்கேறின. இவ்வாறான நிலையில், பற்பல சிக்கல்களுக்கும் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். எனினும் போராட்டகாரர்கள் அவரையும் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் அதனையும் சமாளித்து நட்டின் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து அடுத்தடுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் ரணில், ஐ எம் எஃப் உடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார்.
கடன் மறுசீரமைப்பு என பல நடவடிக்கைகளை எடுக்க முயன்று வருகின்றார். இது இலங்கை மீதான நம்பிக்கையை மேலும் மேம்படுத்தலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மை பத்திரங்கள் மூலம் கடன் பெற்ற சிறிலங்கா
அதேவேளை சீனா, இந்தியா, அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட்ட பல நாடுகளிடம் கடனைப் பெற்றுள்ள சிறிலங்கா, இறையாண்மை பத்திரங்கள் மூலமாகவும் கடன் பெற்றுள்ளது.
சுமார் 50 பில்லியன் டொலர்களை சிறிலங்கா செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பும் மிக குறைவாகவே உள்ளது.
இதற்கிடையில் மீண்டும் புதிய கடன் வாங்கும் நிலைக்கு சிறிலங்கா தள்ளப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.