சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் சர்வதேச நாணய நிதிய நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பில் அதிபர் வெளியிட்ட விசேட அறிவிப்பில் மேற்கண்டவாறு நன்றி கூறியுள்ளார்.
இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல்
“இலங்கை சுதந்திரமடைந்து கடந்த 75 வருடங்களில் எமது பொருளாதார எதிர்காலத்திற்கு இதனை விட மிகவும் நெருக்கடியான காலகட்டம் இருந்ததில்லை.
எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மற்றும் சாதகமான செயற்பாடுகளைத் தொடர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.
ஆதரவிற்கு நன்றி
ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் எங்கள் கடன் வழங்குபவர்களுடனும் நாங்கள் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.
தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும்.
இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” – என்றார்.