சமூகப் பாதுகாப்புச் சட்டம் மூலம் ஊடாக சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகளை கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபர் ரஹ்மான் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களை ஒடுக்க அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமொன்றை சமர்ப்பித்து வர்த்தமானியில் பிரகடனம் செய்து நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நாட்டின் சிவில் செயற்பாட்டாளர்கள்,
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் வெளிநாட்டு அமைப்புக்கள் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு சட்டத்திற்கு எதிராகவும் செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்தச் சட்டமூலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை நசுக்கவும், தமக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தவும் அரசாங்கம் முயற்சிப்பதையும் காண்கிறோம்.
குறிப்பாக நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்,தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டிய போது, அதை பொருட்படுத்தாது அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து விதிகளை நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை நசுக்கும் முயற்சியில் ஈடுபட முயற்சிப்பதாகவே நாம் கண்கிறோம்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டு மக்களின் எதிர்ப்புடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச எதிர்ப்பும் இருப்பதால், இதையும் தாண்டி இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சித்தால் ஜி.எஸ்.பி.சலுகையும் இல்லாது போகும் அபாயமுண்டு.
ஒரு படி பின்வாங்கிய அரசாங்கம்
இந்த விடயங்கள் அனைத்திலும் கருத்திற் கொண்டு அரசாங்கம் ஒரு படி பின்வாங்கியுள்ளது.
இந்த பயங்கரவாத சட்டமூலத்தை அரசாங்கம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ள போதிலும், சமூக ஊடக பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
அதற்குத் தேவையான அனைத்து விதிமுறைகளும், ஒழுங்குகளும் சட்ட வரைவுகளும் தயாராகி வருகின்றன.
சமூக ஊடகப் பாதுகாப்பு சட்ட மூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படலாம்.
பயங்கரவாதச் சட்டத்தை வாபஸ் பெற்ற அரசாங்கம் ஏன் சமூக ஊடகப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயல்கிறது? என கேள்வி எழுப்பினார்.