சித்திரவதை
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட ஏழு இலங்கையர்கள் ரஸ்ய படையினரால் தாம் சித்திரவதை செய்யப்பட்ட விதத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெண் ஒருவர் உள்ளிட்ட ஏழு இலங்கையர்கள் படையெடுப்பின் தொடக்கத்தில் குப்யன்ஸ்கில் இருந்ததாக கார்கிவ் ஒப்லாஸ்டில் உள்ள தேசிய காவல்துறையின் புலனாய்வுத் துறையின் தலைவர் செர்ஹி போல்வினோவ் (Serhii Bolvinov) தெரிவித்தார்.
இந்த குழுவினர் மே மாதம் கார்கிவ் நகரை கால்நடையாக அடைய முயன்றதாகவும், ஆனால் முதல் சோதனைச் சாவடியில் ரஸ்ய துருப்புக்களால் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்ய துருப்புக்களால் சித்திரவதை
ரஸ்யர்கள் இலங்கையர்களின் கைகளைக் கட்டி, அவர்களின் தலையில் பைகளை வைத்து அவர்களை வோவ்சான்ஸ்கில் உள்ள தற்காலிக சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றதாக புலனாய்வுத் துறையின் தலைவர் கூறியுள்ளார்.
அங்கு மனிதாபிமானமற்ற நிலையில் இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டு துப்புரவு பணியாளர்களாக பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பெண் இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களில் இருவரின் நகங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. ஒருவரின் தலையில் தாக்கப்பட்டுள்ளது.
பணம் கோரிய ரஸ்ய இராணுவம்
ரஸ்யர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளாததால், அவர்களிடமிருந்து உண்மையில் என்ன விரும்புகிறார்கள், எதற்காக அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதை இலங்கையர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை.
சித்திரவதையின் போது ரஸ்யர்கள் பணம் என்று சொன்னதுதான் அவர்கள் புரிந்துகொண்ட ஒரே விடயம்.
இதன்படி தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களிடம் ரஸ்ய இராணுவம் பணம் கோரியது என புலனாய்வுத் துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் முறையான குடியிருப்பு நிலைமைகள்
வோவ்சான்ஸ்க் உக்ரைனால் மீண்டும் கைப்பற்றப்பட்டவுடன், இலங்கையர்கள் கார்கிவ் நகருக்கு கால்நடையாகச் செல்ல முடிவு செய்தனர்,
வழியில் ஒரு காவலாளி அவர்களைச் சந்தித்து உக்ரைன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
கொடூரங்களை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும்
இலங்கையர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் மற்ற விவரங்களை உறுதிப்படுத்துவதற்கும் இப்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வுத் துறையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஏற்கனவே இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதுடன், அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் முறையான குடியிருப்பு நிலைமைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற கொடூரங்களை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது, அதைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என புலனாய்வுத் துறையின் தலைவர் கூறியுள்ளார்.