ரஷ்ய ஏவுகணைகள் போலந்து நாட்டை தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான போலந்து நேட்டோவின் உறுப்பினராக அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து கிராமமான Przewodow-யில் ரஷ்ய ஏவுகணைகள் வீழ்ந்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவர் உயிரிழப்பு
தானியங்கள் காய்ந்து கொண்டிருந்த அந்த பகுதியில் ஏவுகணை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், போலந்தின் அரசு செய்தித் தொடர்பாளர் பியோட்டர் முல்லர் இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
எனினும் அவர், உயர்மட்ட தலைவர்கள் நெருக்கடி சூழ்நிலை காரணமாக அவசர கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தார்.
ரஷ்யா முற்றாக மறுப்பு
இதனிடையே உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து கிராமமான ப்ரெஸ்வோடோ மீது தமது ஏவுகணைகள் விழுந்ததாக போலந்து ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளின் தகவலை ரஷ்யா முற்றாக மறுத்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்த அறிக்கைகள் “நிலைமையை மோசமாக்க வேண்டுமென்ற ஆத்திரமூட்டல்” என்று தெரிவித்தது.
“உக்ரைனிய-போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இலக்குகளுக்கு எதிராக ரஷ்ய அழிவு முறைகள் மூலம் தாக்குதல்கள் எதுவும் செய்யப்படவில்லை,” என்று அந்த அறிக்கை கூறியது. போலந்து ஊடகங்களால் படமாக்கப்பட்ட காட்சியில் இருந்த ஏவுகணைத் துண்டுகள் ரஷ்ய ஆயுதங்களுடன் தொடர்புடையவை அல்ல எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை “நாங்கள் இந்த அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறோம், மேலும் எங்கள் நட்பு நாடான போலந்துடன் நெருக்கமாக செயற்படுகிறோம்”என நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.