உக்ரைனின் தென் பிராந்தியத்திலுள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க
கெர்சன் நகரில் இருந்து தமது இராணுவம் முழுமையாக மீளப்
பெறப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கெர்சன் நகரில் இருந்து தமது படையினர்
வெளியேற்றப்பட்டமை அவமானகரமானது அல்லவென ரஷ்ய
அதிபர் விளாடிமீர் புட்டீனின் பேச்சாளர் திமித்ரி பஸ்கோவ்
கூறியுள்ளார்.
உக்ரைனின் கெர்சன் நகரிலுள்ள நீப்ஃபுறோ ஆற்றின் மேற்கு
அணை பகுதியில் இருந்து கிழக்கு அணைப் பகுதி நோக்கி
படையினர் நகர்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு
கூறியுள்ளது.
கெர்சன் நகரிலுள்ள நீப்ஃபுறோ ஆற்றின் மேற்கு அணை பகுதியில்
எந்தவொரு ஆயுதமோ படையினரோ தற்போது இல்லை என ரஷ்ய
பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனின் தேசியக் கொடி
இந்த நிலையில் கெர்சன் நகர மத்தியிலுள்ள பிராந்திய நிர்வாக
கட்டடத்தில் உக்ரைனின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன்,
அதில் ஐரோப்பிய ஒன்றிய கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளது.
அத்துடன் கெர்சன் நகர மத்தியில் மக்களின் பிரசன்னமும்
காணப்படுவது தொடர்பான நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில்
வெளியாகியுள்ளன.
விசேட படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ரஷ்ய
படையினர் வசம் காணப்பட்ட ஒரே ஒரு பிராந்திய தலைநகராக
கெர்சன் காணப்பட்டதுடன், அங்கிருந்து வெளியேறியுள்ளமை
அவர்களுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பின்னடைவாக
கருதப்படுகின்றது.
அத்துடன் ரஷ்ய படையினர் மற்றும் ஆயுதங்களை நகர்த்துவதற்கு
பயன்படுத்தப்பட்ட நீப்ஃபுறோ குறுக்காக உள்ள பாலமும்
தகர்க்கப்பட்டுள்ள நிழற்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பாலமானது, இடிந்துவீழ்ந்ததா என்பது தெரியவராத நிலையில்,
படையினரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தாமே அதனை குண்டு
வைத்து தகர்த்துள்ளதாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.
இதனிடையே கெர்சன் நகரை நோக்கி தமது படையினர்
முன்னேறிவரும் நிலையில், பல நகரங்களையும் கிராமங்களையும்
தமது படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர்
வெலெடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தடுமாறும் புடின் படை
நகருக்கான விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத
நிலையில், கெர்சன் நகரில் இருந்து தமது படையினரை மீளப்
பெறுவதாக உக்ரைனிலுள்ள ரஷ்ய படைகளின் கட்டளை தளபதி
கூறியுள்ளார்.
இதேவேளை உக்ரைனுக்காக தென்கொரியாவில் தயாரிக்கப்பட்ட
ஒரு இலட்சம் எறிகணைகளை கொள்வனவு செய்வதற்கு
அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
எனினும் உக்ரைனுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய
உதவிகளை வழங்காதிருக்கும் கொள்கையில் எந்தவொரு
மாற்றமும் செய்யப்படவில்லை எனக் கூறியிருந்த நிலையில், இந்த
தகவல் வெளியாகியுள்ளது.