எரிவாயு கொள்கலன்களால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் வெள்ளைப்பூண்டு ஊழல் குறித்து எச்சரிக்கை விடுத்த தகவலாளர் ஒருவர், பல மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்களை மேலும் அம்பலப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில், இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர்,
பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக, அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள்
தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன், வெள்ளைப்பூண்டு மோசடி மற்றும் வீட்டு எரிவாயு கொள்கலன்களால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்திய போதிலும், இந்த மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் இன்னும் பதவியில் இருப்பதாக குணவர்தன கூறியுள்ளார்.
இந்தநிலையில், முன்னாள் வர்த்தக அமைச்சரும், தற்போதைய ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன, தமது தனிப்பட்ட இலாபங்களுக்காக ஊழல் அதிகாரிகள் சிலரை பாதுகாத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, வர்த்தக அமைச்சின் மோசடிகள் தொடர்பில், பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம், துஷான் குணவர்தன கோரியுள்ளார்.
முக்கிய தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டாலும், எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கூட தாம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால் அந்த விடயம் தொடரப்படவில்லை என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.