வடக்கு, தெற்கு என்று இல்லாமல் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது.
ஆனால் இதனைத் தடுப்பதற்கான வேலைகளை இனவாதம் மிக்க அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு அவர்களுக்கான நினைவஞ்சலியை செய்வதற்கு கூட தடை விதிக்கும் நிலைமையையும் ஏற்படுத்தியிருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இனவாத சிந்தனை
“நாடாளுமன்றத்தில் இனவாதம் தொடர்பில் நிறைய விடயங்கள் பேசப்பட்டது. அதில் நான் பெரும்பாலும் அவதானித்தது இனவாதம் தொடர்பில் பேசும் போது நாம் மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதனை பார்க்கின்றோமே தவிர, எமக்குள் இருக்கின்ற இனவாதம் தொடர்பில் கருத்திற்கொள்வது கிடையாது.
இனவாதத்திற்கு எதிராக பேசும் போது கூட நாம் எவ்வளவு இனவாத சிந்தனை மிக்கவர்கள் என்பது தொடர்பில் உணர்ந்து கொள்வது கிடையாது.
மற்றவர்களை மாற்ற முயலும் முன் எமக்குள் இருக்கின்ற இனவாதம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
நினைவு கூருவதற்கான உரிமை
இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அவர்களை நினைவு கூருவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது.
ஆனால் இதனைத் தடுப்பதற்கான வேலைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான செயற்பாடுகளின் பின்னால் அரசாங்கம் தான் உள்ளது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்” – என்றார்.