Vijay - Favicon

எலிசபெத்தின் படைகள் பிரமந்தனாற்றில் செய்த கொடூரம்! அரங்கேறிய உண்மை சம்பவம்



Courtesy: ஜெரா

ரகசியம்

நேற்று இலங்கையில் விடுமுறை நாள். பிரித்தானியாவின் மகாராணியாரான எலிசபெத் இறந்தமைக்காக சோகத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டது.



எங்கோ ஒரு தேசத்தின் இராணியான எலிசபெத்துக்கு அஞ்சலி உட்பட அனைத்து மரியாதைகளையும் வழங்கிவிட்டோம்.

ஆனால் அவரின் காலத்தில், அவரின் நாட்டுப் படைகள் கூட தமிழர்களுக்கு அநீதியே செய்திருக்கின்றன.



அதற்கு எடுத்துக்காட்டான ஒரு சம்பவத்தை தழுவியே இப்பத்தி எழுதப்படுகிறது,


பிரமந்தனாறு
வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடுவுக்குப் பின்புறமாக பிரமந்தனாறு எனப் பெயர் பெறும் விவசாய கிராமம் ஒன்றுள்ளது.

அந்தக் கிராமத்தின் தொடக்கப் பகுதியில் இருக்கிறார் விநாயகமூர்த்தி கணேசமூர்த்தி என அழைக்கப்பட்ட நாட்டு மருத்துவர் ஒருவர்.


2020ஆம் ஆண்டில் இறந்துபோன அவர் தன் வாழ்நாளில் பரமரகசியமாக ஒரு விடயத்தை வைத்திருந்தார்.

அவரின் வாழ்க்கையில் மிகப் பெரும் துன்பியல் சம்பவமாக இருந்த அந்த நினைவுகளை இறுதிவரை அவரால் மறக்க இயலவில்லை.

தன் நினைவில் இருந்தவற்றை அப்படியே பகிர்ந்தார்.

படுகொலை செய்ய பயிற்சியளித்த சம்பவம்

“1985ஆம் ஆண்டு பத்தாம் மாசம் ரெண்டாம் திகதி, காலம் இருக்கும். நான் வீட்டில இருந்து வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் வந்துகொண்டிருந்தன்.

அப்ப எனக்கு 13 வயது. இப்ப சங்கக் கடை இருக்கிற இடத்தில அருள்முருகன் ரேடர்ஸ் என்றொரு கடையிருந்தது. அதின்ர முதலாளி சிவபாதம்.


நான் கடையடிக்கு வர, கடைக்குப் பின்னால இருந்து ரெண்டு ஆமிக்காரர் என்னைக் கூப்பிட்டாங்கள். நான் பயத்தில ஓடவும் முடியாமல், அவங்களிட்ட போனன்.

முகத்தில கரி பூசியிருந்தாங்கள். ஓரளவு கிட்ட போனதும், என்னைப் பிடிச்சிற்றாங்கள்.

நேர கடைக்குப் பின் பக்கமாக இழுத்துக் கொண்டு போனாங்கள். அங்க பார்த்தால், நிறைய ஆமிக்காரர் வரிசையில படுத்துகிடக்கிறாங்கள்.

சிலர் முகத்துக்கு கரி பூசியிருக்கிறாங்கள்.

பக்கத்தில இருந்த பற்றைக்காடெல்லாம் ஆமிக்காரர் இருந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாங்கள். ஆனால் அதில் வெள்ளைக்காரங்களும் இருந்தாங்கள். இலங்கை ராணுவமும் இருந்தது.

பிறகு அறிஞ்சன், வெள்ளக்காரர் இங்க வந்து, எப்பிடி ஆக்கள படுகொலை செய்யிறதென்று ட்ரெயினிங் குடுத்தவங்களாம்.

அந்த ட்ரெயினிங் தான் அன்றைக்கு அங்க நடந்தது’.

இலங்கை ராணுவமும், வெள்ளைக்காரங்களும்

எலிசபெத்தின் படைகள் பிரமந்தனாற்றில் செய்த கொடூரம்! அரங்கேறிய உண்மை சம்பவம் | Queen Elizabeth Forces Killed Tamil People

வெள்ளைக்காரர் என்றதும், அவருடன் உரையாடுவதில் புதிய உற்சாகம் ஏற்பட்டு விடுகிறது. ‘இது புதுசா இருக்கே’ என்ற சிந்தனை மேலிட பரிகாரியாரின் கதையைக் கேட்க காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்கின்றேன்.

அந்த இடத்தை சுற்றிப்பார்த்தன்.

பிரமந்தனாற்றை சேர்ந்த அதிகமான ஆம்பிளைள் அங்க பிடிபட்டிருக்கிறாங்கள். எல்லாரின்ர கைகளும் பின்னுக்கு கட்டப்பட்டிருக்கு. எல்லாரையும் முட்டுக்காலில் குனிஞ்சபடி வரிசையில் இருத்திவச்சிருக்கினம்.



அதை நான் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கேக்குள்ளயே, என்னை பிடிச்சிக் கொண்டு வந்தவங்களில் ஒருவன், தன்ர பாக்ல இருந்து ஆண்கள் அணியும் பழைய உள்ளாடை ஒன்றை எடுத்தான்.

அதை என்ர முகத்தில கண்ணை மறைக்கும்படி போட்டான். மற்றாக்களுக்கும் அப்படித்தான் உள்ளாடைகள போட்டு கண்ண மறைச்சிருக்கிறாங்கள். எனக்கு தலை சின்னனெண்டபடியாலும், உள்ளாடையின்ர துணி கண்ணறையா இருந்தாலும், வெளியில என்ன நடக்குதென்று மங்கலாக தெரியுது.



உள்ளாடைய என் தலைக்கு மாட்டிவிட்டிற்று, கடையில கிடந்த இழக் கயிற்றைக் கொண்டு வந்து, என்ர கைய பின்னால இழுத்து கட்டினவங்கள். கட்டிப்போட்டு, என்ர பின்பக்கத்த நல்லா மடிச்சி, கட்டின கை வளைவுக்குள்ள இழுத்து செருகினாங்கள்.

எனக்கு என்ர கை நீளமா இழுபட்டமாதிரி இருந்தது.

அப்பிடியே என்னைய தூக்கி, மண்ணெண்ணெய் பெரலோட சாத்திவிட்டாங்கள். என்னைய சாத்திவிட்டிற்று அதில நின்ற ரெண்டு ஆமிக்காரரும், றோட்டுக்குப் போனாங்கள்.


இந்த சந்தர்ப்பத்தில நான், என்னை சாத்தி வச்சிருந்த எண்ணெய் பெரலுக்கு, எண்ணெய் வெளிய வாறதுக்கு பொருத்தியிருந்த பைப்பில இழக்கயிற்று முடிச்ச செருகி ரெண்டுதரம் இழுத்தன் கட்டு அவிழ்திற்று. சின்னப்பெடியன் தானே அவிழ்க்கமாட்டான் என்று நோர்மலா கட்டியிருப்பாங்கள் போல.


அந்த நாளையில எண்ணெய் அளந்துகுடுக்க பெரலில் அப்படியொரு பைப் பொருத்தியிருப்பாங்கள். இப்பத்தையான் தண்ணி பைப் மாதிரி இருக்கும். கை அவிழுப்பட்டதும், நான் அங்க நடக்கிற சம்பவங்கள வடிவா பார்க்கத் தொடங்கினன்.

சத்தியசீலனின் கொடூரச் சாவு 

எலிசபெத்தின் படைகள் பிரமந்தனாற்றில் செய்த கொடூரம்! அரங்கேறிய உண்மை சம்பவம் | Queen Elizabeth Forces Killed Tamil People


றோட்டில சத்தியசீலன் சயிக்கிளில் வந்துகொண்டிருக்கிறார். அவர் கள்ளிறக்கும் வேலைதான் செய்யிறவர். என்னைய எல்லாம் தன்ர சயிக்கிளில் பள்ளிக்கூடம் ஏத்திக்கொண்டு போய் விடுறவர்.

நல்ல திடகாத்திரமான ஆம்பிள.

இடுப்பில சரத்த நல்லா மடிச்சிக் கட்டியிருக்கிறார். கள்ளு சீவுறதுக்கான கத்தி பெட்டி இடுப்பில இருக்கு. சத்தியசீலன மறிச்சி, ஏதோ தென்னை மரத்தக் காட்டி கேட்டாங்கள்.

அவர் சயிக்கிள நிப்பாட்டிப்போட்டு, அவடத்தில நின்ற தென்னையில் ஏறி, பெரியதொரு இளநீர் குலைய இறக்கினார்.

அவர் இறக்கின கையோட எல்லா ஆமிக்காரரும் அவடத்துக்குப் போயிற்றாங்கள். சத்தியசீலன் நல்ல ஸ்ரைலா இளநீர் வெட்டி குடுக்க எல்லாரும் குடிக்கிறாங்கள்.


ஆளோட ஏதோ எல்லாம் கதைக்கிறாங்கள். ஆளும் அங்க நடக்கிற விசயங்கள் தெரியாமல் வலுபுளுகா கதை சொல்லிக்கொண்டிருக்கு.

சைகையாளயும் ஏதோ எல்லாம் சொல்லுது.

சத்தியசீலன் இளநீர் எல்லாம் குடுத்து முடிச்சிற்று, வெளிக்கிட்டுப்போறதுக்கு சயிக்கிள எடுத்தார்.

உடன அதில நின்ற ஆமிக்காரன் சத்தியசீலனின் நெத்திக்கு நேர துவக்க நீட்டினான். எனக்கு விளங்கீற்று, ஆளுக்கு சூடு விழப்போகுதென்று.


சத்தியசீலன் சயிக்கிள துவக்க நீட்டின ஆமிக்கு மேல தள்ளிவிட்டார் அவன் எதிர்பார்க்காமல் இடறுப்பட்டு விழ, திருப்பியும் சயிக்கிள தூக்கி அவனுக்கு மேல போட, சயிக்கிள் பாருக்குள்ள அவனின்ர தலை சிக்கீற்று.

ஆனாலும் அவன் தன்ர ரெண்டு கையாலும் சத்தியசீலன பிடிச்சிக்கொண்டான்.

மற்ற ஆமிக்காரர் சுட வலம்பார்க்கிறாங்கள். ஆனால் சத்தியசீலன் தன்ர பாலக் கத்திய எடுத்து, சயிக்கிள் கொழுவுப்பட்ட ஆமிக்காரரின் கழுத்துக்கு கிட்ட கொண்டு போறார். அவன் தள்ளுப்பட்டு தடுக்கிறான்.


இப்பிடியே கொஞ்ச நேரம் இழுபட, மற்ற ஆமிக்காரர் எல்லாம் ஓடிவந்து சத்தியசீலன பிடிச்சி தனி எடுத்திட்டாங்கள். சத்தியசீலன உதைஞ்சி கீழ விழுத்தி, தறதறவென்று இழுத்துக்கொண்டு போய் பக்கத்தில இருந்த மதகில கிடத்தினாங்கள்.


மல்லாக்க கிடத்திப்போட்டு, அவர் இடுப்பில கட்டியிருந்த சரத்த மேல தூக்கிப் போட்டு, அவரின் அந்தரங்க உறுப்பிலயே மாறிமாறி சுட்டாங்கள்.

அந்த இடத்திலயே அவரின்ர உடம்பு சல்லடையாகிற்று. அப்பிடியொரு கொடுமைய நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டது கூட இல்ல.

அந்த வார்த்தைகளில் இருக்கும் வலி நம்மை தொற்றிக்கொள்கிறது.

கட்டவிழ்த்து தப்பித்த 15 பேர் 

எலிசபெத்தின் படைகள் பிரமந்தனாற்றில் செய்த கொடூரம்! அரங்கேறிய உண்மை சம்பவம் | Queen Elizabeth Forces Killed Tamil People

கவலையும், பயமும் மேலிட பரிகாரியின் வார்த்தைகளை எதிர்பார்க்கிறேன். இனி இங்க இருக்கிற ஆபத்தென்று விளங்கிற்று. நான் ஒவ்வொருவராக கட்டியிருந்த ஆக்கள அவிழ்க்கிறன்.

ஓவ்வொருவரும் மாறிமாறி மற்ற ஆக்கள அவிழுங்கோ.

பின்பக்கத்தால ஓடுவம் என்று கிசுகிசுத்தன். ஆனால் ஒவ்வொருவரையும் நான் அவிழ்த்ததுதான் தாமதம், மற்றாக்கள அவிழ்க்காமலே ஓடத்தொடங்கீற்றாங்கள்.

சரியா நினைவில்ல, கிட்டத்தட்ட 15 பேர் இருக்கும். கடைசியா இருந்தவர அழித்துவிட ஆள் கடையின்ர முன்பக்கத்தால வெளிக்கிடுது.

போக வேண்டாம், போனால் சுடுவாங்கள் என்று சொன்னன். இல்ல தம்பி, என்ர மணிக்கூட்ட பறிச்சிப்போட்டாங்கள். அதை வாங்கிக்கொண்டு வாறன் என்று கடைக்கு வெளியால போனார்.

நான் பின் பக்கத்தால ஓடத் தொடங்கினன். கடைப் பக்கம் ஒரே வெடிச்சத்தம் கேட்கத் தொடங்கீற்று. பிறகு ஹெலிஹொப்ரர் சுத்தி சுத்தி அந்தப் பகுதியெல்லாம் சுட்டது.

நாங்கள் ஒழிச்சிற்றம்.

பிணக்காடாக காட்சியளித்த கடையடி 

எலிசபெத்தின் படைகள் பிரமந்தனாற்றில் செய்த கொடூரம்! அரங்கேறிய உண்மை சம்பவம் | Queen Elizabeth Forces Killed Tamil People

பின்னேரம்போல கடையடிப் பக்கம் போய் பார்த்தம். ஒரே பிணக்காடாக இருந்து அந்த இடம். அந்த இடத்திலயே 17 பேர் இறந்து கிடந்தாங்கள். தூரத்தூரமாக சுட்டுப்போட்டிருந்தாங்கள்.

சில நாட்களுக்குப் பிறகும் ஆக்களின்ர உடற்பாகங்கள் வயலுகளில் கிடந்தும், மிருகங்கள் சாப்பிட்டபடியும் எடுத்தனாங்கள்.

நான் நினைக்கிறன், அந்த சம்பவத்தில 30 பேருக்குக் கிட்ட சுடப்பட்டிருக்கலாம்.

அந்தக் கடையின்ர முதலாளி சிவபாதம் ஐயாவின்ர சடலம் கனதூரம் தாண்டி வயலுக்க கிடந்தது. சிதறிப்போய் கிடந்தது…

” இந்தப் படுகொலையின் சாட்சியான விநாயக்மூர்த்தி இன்று உயிருடன் இல்லையாயினும், இதனை மேற்கொண்டது பிரித்தானியாவின் கூலிப் படையொன்று தான் என்பதற்கு 2020ஆம் ஆண்டில் Phil Miller என்ற இராணுவ தளபதி எழுதிய ‘Keenie Meenie’ என்ற நூலில் போதிய ஆதாரங்கள் உள்ளன.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *