திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் பிரபல நடிகைகள் இருவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) ஏற்கனவே நடிகை ஒருவரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ப்ரியாமாலி வைத்திருந்த பாலியல் உரையாடல்கள் அடங்கிய ஆடியோ பதிவு குறித்து பிரபல நடிகை ஒருவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, ஆனால் இந்த ஆடியோ பதிவுகள் தனக்கு நினைவில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பிரியமாலியின் வேண்டுகோளுக்கு இணங்க குறிப்பிட்ட வர்த்தகர் ஒருவரை நேரில் சென்று பிரியமாலியின் நிறுவனத்தில் 750 மில்லியன் ரூபாவை வைப்பிலிடுமாறு தூண்டியதாக இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொரல்லே சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.
பிரியமாலியின் தங்கக் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சிறிசுமண தேரரிடம் தனியான விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பிரியாமாலிக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன இந்த மோசடி நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலுள்ள கிரிஷ் கட்டிட வளாகத்திற்குள் பிரியமாலியின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது நிறுவனம் இந்தியாவில் இருந்தும் பணம் பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பிரியாமாலியின் நிறுவன ஊழியர்களுக்கு மாதாந்தம் 5 மில்லியனுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியை நிறுவனம் எவ்வாறு பெற்றுக்கொண்டது என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.