இலங்கை தமிழர்களின் உரிமையை மறுக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனை எதிர்த்து குரல் கொடுக்கும் மக்களை பிரச்சனைகளுக்கான மூல காரணமாக அரசாங்கம் அடையாளப்படுத்துவதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட விகாரையை பாதுகாப்பதற்கான உத்தரவை வடக்கில் உள்ள காவல்துறையினர் நீதிமன்றத்திடம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
விகாரை விவகாரம்
குறித்த விகாரை கட்டப்பட்ட காணி உரிமையாளர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத செயலை எதிர்த்து போராடிய எமது மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் வடக்கில் உள்ள காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்தி, இது தொடர்பான முறையான விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட வேண்டும்.
இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அதிபருக்கும் சார்பான உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட தவறான விடயங்களுக்கு எதிரான விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்கின்றனர்.
இதுவே நடைபெறுகின்றது.
இது ஒரு அவமானமான செயல். இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக காணப்பட்ட இனங்களுக்கு இடையிலான மோசமான உறவுகளே இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு காரணமென அரசாங்க தரப்பில் உரையாற்றிய தென்னகோன் தெரிவித்திருந்தார்.
75 வருடங்களாக நடந்த தவறுகள்
இதற்கான அடிப்படை என்ன? எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை இருக்கும் அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நாட்டின் பிரஜைகளான ஏனையவர்களின் உரிமைகளை முற்றுமுழுதாக மீறியுள்ளனர்.
இலங்கையில் கடந்த 75 வருடங்களாக நடந்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டுமா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பிகிறார்கள்.எனினும், அதுவே தற்போது நடைபெறுகிறது.
கடந்த காலங்களில் நடைபெற்ற விடயங்களின் மூலம் யாரும் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை.
இதனடிப்படையில், இலங்கை ஒருபோதும் தனது காலில் நிக்காது. இதே முறையை அடுத்த 75 ஆண்டுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும்.