தன்னை கடத்த முயன்றார்கள் என தெரிவித்து போலியாக முறைப்பாடு அளித்த 11 வயது பாடசாலை மாணவனை காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
குறித்த மாணவன் நாரஹேன்பிட்டி காவல் நிலையத்தில் போலி முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வானில் வந்த கும்பல் ஒன்று கடத்த முயற்சி
பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த தன்னை வானில் வந்த கும்பல் ஒன்று கடத்த முயன்றதாகவும், ஆனால் அவர்களிடமிருந்து தப்பித்துவிட்டதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.
எனினும், விசாரணையின் போது, இலங்கையில் சிறார்களை கடத்த முயற்சிப்பதாக அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளியைப் பார்த்து கதையை உருவாக்கியதாக மாணவன் தெரிவித்துள்ளான்.
செவ்வாய்க்கிழமை (23) கொழும்பு பார்க் வீதியூடாக பாடசாலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் வானில் வந்த குழுவொன்று தம்மைக் கடத்த முற்பட்டதாக பம்பலப்பிட்டியில் உள்ள ஆண்கள் பாடசாலையொன்றின் மாணவன் தனது தந்தைக்கு அறிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
அவர்களிடமிருந்து தப்பித்துவிட்டதாக மாணவன் மேலும் தந்தையிடம் தெரிவித்ததையடுத்து தந்தையும் மகனும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த நாரஹேன்பிட்டி காவல்துறையினர், குறித்த நாளில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்ததில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.