தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் பேசும் கட்சிகளுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் தீர்வு குறித்து தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பிற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமஷ்டி தீர்வு
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை ஒரே குரலில் பேச வாருங்கள் எனத் தமிழ்க் கட்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நாளை ஒன்றுகூடுமாறு கட்சி தலைவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை அபிலாஷை
தமிழ் கட்சிகளுக்கிடையில் பல்வேறு பேதங்கள் இருந்தாலும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷையை வெளிப்படுத்த வேண்டிய இந்த வேளையில், கட்சி வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு அதனை உரத்துக் கூற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது எனவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் நாளைய கூட்டத்தில் பங்குபற்றுவார்கள் என எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஆகியவற்றின் தலைவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.