பசில் ராஜபக்சவுக்கு தேவை என்றால், இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு, தேர்தலில் போட்டியிட முடியும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோட்டாபயவின் வழியில்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து விட்டே அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அதேபோல், நாட்டில் தேர்தலில் போட்டியிடும் தேவை இருக்குமாயின் பசில் ராஜபக்சவும் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு போட்டியிட முடியும்.
அடுத்த மாதம் தேர்தல் ஒன்றை நடத்தினாலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், எந்த சிரமமும் இன்றி தமது கட்சி வெற்றி பெறும் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச, இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ளார். இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடை 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது. எனினும் அண்மையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவது மற்றும் அரசின் உயர் பதவிகளை வகிப்பது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.