விடுதலைப் புலிகளின் தங்கத்தை ராஜபக்சர்கள் விற்ற விடயத்தில் மிராக்கிள் டோம் வலையமைப்புக்கு தொடர்பு இருப்பதான ஐயங்கள் தற்போது வெளிப்படுகின்றன.
இலங்கையில் குளோரியஸ் தேவாலயம் என்ற கிறிஸ்தவ மத அமைப்பின் தலைவரான ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத குருவின் கீழ் பெரியதொரு பனிப்பாறை ஒழித்திருப்பதான விடயம் தற்போது பகிரங்கத்துக்கு வருகிறது.
மிராக்கிள் டோம்
ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் பௌத்தம், இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை குறித்து இழிவான கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து அவர் கடும் கண்டனங்களுக்கு உள்ளானதுடன், அவரை கைது செய்யும் அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என்ற ஐயங்கள் உள்ள நிலையில், தம்மை கைதுசெய்வதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்துள்ளார்.
இப்போது சர்ச்சையின் மையத்தில் உள்ள ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கிட்டிய பாரிய நிதி மற்றும் கட்டுநாயக்காவில் 2015 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அவரது மிராக்கிள் டோம் எனப்படும் பாரிய வளாகத்தின் பின்னணி ஆகியன பரபரப்பை தோற்றுவிக்கின்றன.
கட்டுநாயக்காவில் நிர்மாணிக்கப்பட்ட குளோரியஸ் தேவாலயத்தின் பிரதான வளாகமான இந்த மிராக்கிள் டோம் இதுவரை இலங்கையில் ஒரு வழிபாட்டுத் தலமாக பதிவு செய்யப்படவில்லை.
இதனால் இலங்கையில் அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தளங்களும் இனிமேல் பதிவு செய்யப்படுவதை சட்டபூர்வமாக மாற்றிக் கொள்ளும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இப்போது தயாராகி வருகின்றார்.
சர்ச்சைக்குரிய மத குருவான, இந்த ஜெரோம் பெர்னாண்டோ அமெரிக்காவின் ஹோடன் கோன்வெல் என்ற இறையியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஏசியன் அக்செஸ் என்ற இறையியல் கல்லூரியில் இறையியல் பட்டம் பெற்றதாகக் கூறப்படுகின்றது.
யூபேட் ஏஞ்சல்
ஜெரோம் பெர்னாண்டோவின் ஆன்மீக தந்தையாக சிம்பாபேயின் சர்ச்சைக்குரிய தீர்க்கதரிசி யூபேட் ஏஞ்சல் கருதப்படுகின்றார்.
யூபேட் ஏஞ்சல் ஒரு இராஜதந்திரியாவார். அவர் தான் ,ராஜதந்திரி என்ற தகுதியைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான டொலர்களை தங்க கடத்தல் மூலம் மோசடி செய்ய முடியும் என்று விடயத்தை பகிரங்கப்படுத்தியமை அண்மையில் புலனாய்வு இதழியல் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
சிம்பாபேயின் அதிபரினால் இராஜதந்திரியாக நியமிக்கப்பட்ட இந்த யூபேட் ஏஞ்சல் தனது உயர் தகுதியைப் பயன்படுத்தி வெளியில் உள்ள அழுக்குப் பணங்களை சிம்பாபேக்குள் உள்ளெடுத்து அந்தப் பணத்தை சிம்பாபேயின் தங்கத்திற்கு மாற்றி, அதனைப் பின்னர் வெள்ளைப் பணமாக மாற்றலாம் எனக் குறிப்பிட்டமை புலனாய்வு செய்தியாளர்களால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அம்பலப்படுத்தப்பட்டது.
ஆனால், இந்தப் புலனாய்வுச் செய்திகள் வெளிவர ஒரு வார காலத்திற்கு முன்னதாக கட்டுநாயக்காவில் உள்ள ஜெரோம் பெர்னாண்டோவின் மிராக்கிள் டோமில் இந்த சர்ச்சைக்குரிய சிம்பாபே மதகுரு யூபேட் ஏஞ்சல் இருந்தார்.
இதற்கிடையே, ஜெரோம் பெர்னாண்டோவுடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச இருக்கும் நிழற்படம் படங்களெல்லாம் வெளியாகிய நிலையில், அவருடன் தனக்கு நெருங்கிய தொடர்பில்லை என மஹிந்த ராஜபக்ச பின்னர் மறைத்திருந்தமை வேறு விடயம்.
இந்த நிலையில் தான், விடுதலைப் புலிகளின் தங்கத்தை ராஜபக்சர்கள் விற்ற விடயத்தில் மிராக்கிள் டோம் வலையமைப்புக்கு தொடர்பு இருப்பதான ஐயங்கள் தற்போது வெளிப்படுகின்றன.