கிளிநொச்சி மக்களின் வறுமையையும், ஏழ்மையையும் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் துல்லியமான காய்நகர்த்தல் ஒன்றை மேற்கொள்கிறது என்று தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைவாக, பணத்தின் ஊடாக அப்பகுதி மக்களை குடிபெயர்த்தும் பாரிய முயற்சியும் இடம்பெறுவதாகவும், அதன் மூலம் கிளிநொச்சி மண்ணுக்கு பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏமாற்றப்படும் மக்கள்
அண்மைய நாட்களிலே கிளிநொச்சியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதாகத் தெரிவித்து மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீடு கட்டி தருகின்றோம், வீதி போட்டு தருகின்றோம், பல்வேறு உதவிகளை செய்கின்றோம் எனக்கூறி ஒரு கும்பல் மக்களிடமிருந்து வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்துக்களை வாங்குகின்றனர்.
மக்களை வெளியேற்றும் நடவடிக்கை
அதுமட்டுமன்றி, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொன்னாவெளி என்ற கிராமத்தின் மிகப்பெரிய வளமான முருகைக்கற்களை அகழ்ந்தெடுத்து அந்த இடத்தில் பாரிய சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் முயற்சித்து வருவதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.
மேலும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு இல்லை. மக்களிற்கான நியாயமான அபிவிருத்தி இல்லை. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமித்தும், விகாரைகளையும் அமைக்கின்ற அதேவேளை தொழிற்சாலை அமைத்தல் என்ற மாஜையை தோற்றுவித்து அந்த பகுதியில் மக்கள் வாழ முடியாதவாறு இடம்பெயர்க்கின்ற மிகப்பெரிய
காரியத்தை சிறிலங்கா அரசு துல்லியமாக கையாள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலக்கு வைக்கப்படும் அப்பாவிகள்
அப்பாவிகளாக வறுமையின் விளிம்பில் வாழுகின்ற மக்கள் இவ்வாறான விடயங்களிற்கு ஆதரவளிப்பது சாதாரணமானது. அதை நாங்கள் யாரும் நிராகரிக்க முடியாது.
அந்த வறுமையையும், ஏழ்மையையும் பயன்படுத்தி, நில அபகரிப்புக்கள் இடம்பெறுவதாகவும் இதனால் கிளிநொச்சி மண்ணுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.