Courtesy: படங்கள் – அ.நிக்ஸன்
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளிலும் தற்போது பெயர் பலகைகள் காணப்படுகின்றன.
விமான நிலையத்தில் ஒவ்வொரு பிரிவையும் சுட்டிக்காட்டும் வகையில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் இத்தனை காலமும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளே காணப்பட்டன.
ஆனால் திடீரென அண்மைய நாட்களாக மேற்குறிப்பிட்ட மூன்று மொழிகளுடனும் சேர்ந்து இந்திய, சீன மொழிகளிலும் மின்சாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பெயர் பலகைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
தனிச் சீன மொழி
ஏற்கனவே கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தைப் பிரதேசங்களில் உள்ள சில வீதிகள், மிகப் பெரிய கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் சீன விடுதிகள் போன்றவற்றில் உள்ள பெயர் பலகைகள் தனிச் சீன மொழிகளில் மாத்திரம் உள்ளமை தெரிந்த கதை.
விசேடமாக அதுவும் அம்பாந்தோட்டையில் தனிச் சீன மொழி தான் காணப்படுகின்றது.
ஆனால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சீன மொழியில் பெயர் பலகைகள் இருக்கவில்லை.
கொழும்பில் இந்தியத் தூதரகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இந்தி மொழியில் பெயர் பலகைகள் இருந்ததாக தகவல்களும் இல்லை.
ஆனால் முதன் முறையாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளில் பெயர் பலகைகள் இருப்தை தற்போது அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான நிலையில், இந்தியாவும் சீனாவும் இலங்கைத்தீவில் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் பொருளாதார ரீதியில் எப்படிச் செயற்படுகின்றன என்பதை இந்த பெயர்ப் பலகை மூலம் தற்போது தெட்டத்தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
அரசாங்கத்தின் பதில் என்ன?
இந்திய ரூபாய்களை இலங்கையில் பயன்படுத்தலாம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்ததாகச் செய்திகள் வெளியான நாளில் இந்தி மொழி பெயர் பலகை சிறிலங்கா விமான நிலையத்தில் வந்ததா?
அப்படியானால் ஏன் சீன மொழியும் அந்தப் பெயர் பலகைகளில் இணைந்தது?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திடமே பதில் இருக்குமா என்பதும் சந்தேகமே.
ஆகவே இந்தப் பெயர் பலகைகள் பற்றி மேலதிக விமர்சனங்கள் தேவையில்லை எனவும் தெரிகின்றது.
2009 இற்குப் பின்னரான சூழலில் அதுவும் 2015 இற்குப் பின்னர் இது புரியாத புதிர் அல்ல.
ஆனால் எங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி அறிந்துகொள்வது தான் செய்தியின் முக்கிய நோக்கம்.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில், இந்தியர்களும், சீனர்களும் இதன்வழியே கூடுதலாக பயணம் செய்கிறார்கள் ஆகவே தான் இங்கு இந்தியிலும் சீன மொழியிலும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டது எனவும் சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
பொருளாதார பின்னணியா?
ஒருவேளை, தற்போது இலங்கை, பொருளாதார நெருக்கடிச் சூழலில் இருப்பதால் தான் விமான நிலையத்தில் இந்தி, சீன மொழிகளிலும் பெயர்ப் பலகைகள் வந்திருக்க வேண்டும் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
எனவே இதற்குப் பின்னால் அரசியல் உள்ளது என்பதைத் தாண்டி பொருளாதாரம் தான் உள்ளது என்றும் நோக்கலாம்.
ஆகவே இந்த செய்தி, இலங்கைத்தீவின் எதிர்காலம் குறித்து ஒவ்வொருவருக்கும் உணர்த்தியிருக்கும். குறிப்பாகத் தமிழர்கள் இதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.