கச்சதீவில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா கடற்படையினரின் வழிபாட்டிற்காகவே சிறிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என சிறிலங்கா கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையும் கச்சதீவில் நிர்மாணிக்கப்படாது எனவும் கடற்படை ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவியவருகையில்,
கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளதுடன் அங்கு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படுகின்றது.
கடற்படையின் அறிக்கை
இந்த நிலையில் கச்சதீவில் தற்போது, இரகசியமாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை இலங்கையிலும் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகளை கொண்டு பனை ஓலையினால் வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்ததுடன் புத்தர் சிலைக்கு பின்னால் அரச மரங்கள் நாட்டப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே சிறிலங்கா கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக, ஒரு சிறிய புத்தர் சிலை கச்சதீவிலுள்ள கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வழிபாட்டிற்காக மட்டுமே
புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர, கச்சதீவில் வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் செய்ய முடியாது எனவும் இதனால் கடற்படையினர் தற்காலிகமாக கட்டப்பட்ட இராணுவ இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர, கச்சதீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என்றும், எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாது என்றும் சிறிலங்கா கடற்படையின் ஊடப்பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.