பிறப்புச்சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவைகள் வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சிறிலங்கா நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதனடிப்படையில், குறித்த தரப்பினரின் தேவைகளை கருத்தில் கொண்டு அவற்றை பூர்த்தி செய்யும் நோக்கில் இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சிறிலங்கா நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் நடமாடும் சேவை இடம்பெற்றது.
மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்கள்
இந்த நிகழ்வில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ச,
”இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து யுத்த காலங்களில் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்களின் தேவைகளை ஆராய வேண்டியது மற்றும் அவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமையாகும்.
இலங்கையர்கள் என்ற அடையாளம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
இலங்கையின் யுத்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிலிருந்து பலர் இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியிருந்தனர்.
எனினும், இவ்வாறாக மீண்டும் இலங்கைக்கு திரும்பியவர்களிடம் பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்ட பல அத்தியாவசிய சான்றிதழ்கள் இல்லாதிருந்தது.
மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு
குறித்த தரப்பினர் இலங்கையர்கள் என்பதை நிறுபிப்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை. இவ்வாறாக இருப்போரின் தகவல்களை நாம் பிரதேச செயலகத்தினர் மற்றும் கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுக் கொண்டோம்.
இதன்படி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறாக இருப்பதாக நாம் தெரிந்து கொண்டோம்.
வடக்கில் இவ்வாறாக இருப்போருக்கு உதவும் முகமாக நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இவ்வாறான நான்கு நடமாடும் சேவைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், அங்குள்ள 90 வீதமானோரின் பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு வழங்கியுள்ளோம்.
எவ்வாறாயினும், தற்போது திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இவ்வாறான பிரச்சனைகளுடன் இருப்போரை நாம் இணங்கண்டுள்ளோம்.
இந்த மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடமாடும் சேவை 14 அமைச்சுக்கள் மற்றுமு் திணைக்களங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆதரவை பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எமக்கு வழங்கியுள்ளனர். இலங்கையின் அனைத்து மாகணங்களிலும் உள்ள மக்களின் உரிமைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பது எமது நோக்கம்.” என தெரிவித்துள்ளார்.