இந்திய பாதுகாப்பு
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்தியது இந்தியாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் இலங்கைக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள மிலிந்த மொரகொட, இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளுடனான உறவு
நிச்சயமாக எவரையும் குறை கூறும் நோக்குடன் இலங்கை செயற்படவில்லை என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடனான உறவை சமநிலைப்படுத்துவது மிகவும் சவாலானது எனவும், குறித்த விடயத்தில் இலங்கைக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நடைபெற்றவற்றை கருத்தில் கொண்டும் அதில் பெற்ற அனுபவங்களை வைத்தும் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து தீர்மானங்களை எடுப்பதாக மிலிந்த மொரகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.