தற்போதைய அரசாங்கத்தின் மிருகத்தனமான அடக்குமுறை தாங்க முடியாததாகிவிட்டது.
இதன் விளைவாக, நாட்டில் சுதந்திரம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முனைப்புடன் செயற்பட வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற அல்லது தற்போது இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள், எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துபவர்கள், சமூக மற்றும் மனித உரிமைகளில் செயற்படுகின்ற தலைவர்கள் மற்றும் மக்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாக கர்தினால் மேலும் தெரிவித்துள்ளார்.
75 நாட்களாக அநியாயமாக தடுத்து வைப்பு
வசந்த முதலிகே மற்றும் வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்படாமல் 75 நாட்களாக அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்தினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்
அதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, எவ்வித தீவிர உணர்வும் இன்றி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்படும் முறையற்ற விதம் குறித்தும் எமது ஆச்சரியத்தை வெளிப்படுத்த விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.