ஐரோப்பாவின் முதன்மை பொருளாதார நாடான ஜேர்மனியில் தொடரும் பணவீக்கம், அதன் பொருளாதார மந்தநிலையை அதிகரித்துள்ள விடயம் புதிய தரவுகளின் மூலம் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு பின்னர் ரஷ்யாவின் எரிவாயு விநியோகம் மந்தமடைந்ததால் ஜேர்மனியின் பொருளாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சி
ஜேர்மனியில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்கு இடையே பொருளாதாரம் 0.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமை அதற்குரிய பாதக செய்தியாக வெளிவந்துள்ளது.
பொதுவாகவே ஒரு நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்களுக்கு வீழ்ச்சியுறும் போது குறித்த நாடு பொருளாதார மந்தநிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஐரோப்பாவின் முதன்மை பொருளாதார நாடான ஜேர்மனியும் தற்போது பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பணவீக்க வீதம் யூரோ நாணய வலையப்பகுதியின் சராசரியை விட அதிகமாக கடந்த மாதத்தில் பதிவாகியுள்ளது.
பொருளாதார சுமை
ஜேர்மனியில் தற்போது உணவு, உடை மற்றும் தளபாடங்களை உள்ளடக்கிய வீட்டுச் செலவீனம் அதிகரித்து வருவதால் மக்கள் புதிய கொள்வனவுகளை குறைப்பதால் தொழிற்சாலைகளின் தொழில்துறையும் பலவீனமடைந்து வருகிறது.
இதேபோல மின்சார மற்றும் ஹைபிரிட் எனப்படும் கலப்பின வாகனங்களுக்கான அரசாங்க மானியங்கள் குறைக்கப்பட்டதால் வாகனங்களின் விற்பனையும் சரிந்துள்ளது.
ஆகமொத்தம் பொருட்களின் விலை உயர்வுகளால் ஏற்பட்ட சுமை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே ஜேர்மன் பொருளாதாரத்தில் ஒரு சுமையாக தொடர்வதால் அதன் பொருளாதார உறுதிப்பாடு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.