மார்ச் 15ஆம் திகதி, 113.5 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அரசாங்கம் அச்சிட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘தேர்தலுக்கு செலவழிக்க பணம் இல்லை என்று கூறி உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்த போது, தேர்தலை நடத்த பணம் அச்சிட பரிந்துரைத்தோம்.
அரசாங்கத்தின் உடனடி பதில்
சர்வதேச நாயண நிதியத்துடனான பணியாளர் நிலை ஒப்பந்தம் காரணமாக அவர்களால் பணத்தை அச்சிட முடியவில்லை என்பது அரசாங்கத்தின் உடனடி பதில்.
இருப்பினும், ஒரே நாளில், அதாவது மார்ச் 15ஆம் திகதி, 113.5 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அரசாங்கம் அச்சிட்டுள்ளது.
113.5 பில்லியனுக்கு திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி அரசாங்கப் பத்திரங்களை வாங்கும் போது, புதிய நாணயத்தாள்கள் புழக்கத்தில் சேர்க்கப்படும். இது “பணம் அச்சிடுதல்” என்று அழைக்கப்படுகிறது.
எப்படிச் சொல்ல முடியும்?
ஒரு நாளில் 113.5 பில்லியன் ரூபாய் மதிப்பிலான நாணயத்தை அரசாங்கத்தால் அச்சிட முடியும் என்றால், தேர்தல் நடத்துவதற்காக 9 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட முடியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?
மத்திய வங்கியின் ஊடக வெளியீட்டின் படி, மத்திய வங்கி 2,640 பில்லியன் ரூபாய் மதிப்பிலான அரசாங்கப் பத்திரங்களை வைத்திருக்கிறது.
தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் பதவியேற்கும் போது அது 1,773 பில்லியன் ரூபாவாகவே இருந்தது.
867 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சடித்துள்ளார்.
இதற்கிடையில், தேர்தலுக்காக 9 பில்லியன் ரூபாய் அச்சிட முடியாது என்று எங்களிடம் கூறுகிறார்கள்” – என்றார்.