எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எஞ்சிய பத்து அமைச்சுப் பதவிகளுக்காக சிறி லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் கடும் போட்டி உருவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, அமைச்சரவை முப்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் இருபது பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில், புதிதாக பத்து அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பத்து அமைச்சுப் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மொட்டுவின் உறுப்பினர்கள்
ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சி.பி.ரத்நாயக்க, ஜனக பண்டார தென்னகோன், விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
ராஜிதவிற்கு வில்லனான கெஹலிய
சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால் அதனை ஏற்கத் தயார் என ராஜித சேனாரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், சுகாதார அமைச்சராக இருக்கும் ரம்புக்வெல்ல இது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது
ஐக்கிய மக்கள் சக்தியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.