பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைச் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்படும் என சிறிலங்கா காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தில்
களனி பல்கலைக்கழகத்தின் 2ஆம் வருட மாணவர் ஒருவர், சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தம்மை பகிடிவதை புரிந்ததாக குற்றம் சுமத்தி கிரிபத்கொட காவல்துறையில் முதலில் முறைப்பாடு செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதன் பின்னர், முந்தைய சம்பவத்துடன் தொடர்புடைய பல்கலைக்கழக விடுதியில் 2 ஆம் ஆண்டு மாணவர்களின் மற்றொரு குழுவை சிரேஷ்ட மாணவர்கள் குழு ஒன்று தாக்கியுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தில்
சமூக ஊடகங்கள் ஊடாக தகாத படங்களை அனுப்புமாறு கட்டாயப்படுத்தி பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக பேராதனை காவல்துறைக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இந்த வழக்குகள் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு, முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.