நாட்டில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை (ஸ்பா) ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், பாட நெறிகளை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச மருத்துவ கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
நாட்டில் பல ஆயுர்வேத ஸ்பாக்கள் விபச்சார விடுதிகளாக இயங்கி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“ஆயுர்வேத ஸ்பாக்கள், உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். எனினும், அவை மேற்பார்வைக்கு உட்பட்டவை அல்ல. ஸ்பாக்களில் காணப்படும் ஆயுர்வேத சிகிச்சையாளர்கள் பலர் முறையான பயிற்சிகளை பெறாதவர்கள் ஆவர். இதன் விளைவாக, ஆயுர்வேத சிகிச்சையாளர்களாகுவதற்கு ஆர்வமுள்ளவர்களுக்கு தேசிய தொழில் தகுதி (NVQ) நிலை 4 சான்றிதழைப் பெறுவதற்கு வழிவகுக்கும் புதிய நான்கு மாத பாடநெறியை ஆயுர்வேத திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது” என்றார்.