Vijay - Favicon

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது : ஹிருணிகா பிரேமசந்திர!


ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம் என்றும் குறிப்பிட்டார்.

தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாது. ஏனெனில் தோல்வி உறுதியாகியுள்ளது. அதனால்தான் தேர்தலை பிற்போடும் முயற்சியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது.

தேர்தல் இல்லை என்பதற்காக நாம் ஒரு அடியேனும் பின்வாங்கிவிடக்கூடாது. அவ்வாறு நடந்தால் ஏனையக் கட்சிகள் இரு அடி முன்நோக்கி நகரக்கூடும். எமது பிரச்சாரத்தை தொடர வேண்டும். நாளொன்றுக்கு 5 புதிய வாக்காளர்களையாவது நாம் எம்பக்கம் இழுக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க எந்நேரத்தில் எந்த முடிவை எடுப்பார் என்றும் தெரியாது. சிலவேளை அவசர தேர்தலொன்றுக்கு செல்லாம். தேர்தல் இல்லையென நாம் ஒதுங்கியிருந்தால் அவ்வேளையில் எமக்கு சிக்கல் ஏற்படும். எனவேதான் தயார் நிலையில் இருக்குமாறு கோருகின்றேன்.

ரணில் விக்கிரமசிங்கவை தமிழ், முஸ்லிம் மக்களும் நம்பினர். ஆனால் ராஜபக்சக்களை காப்பாற்றப்போய் அவர் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார். தற்போது மக்கள் மனம் வென்ற ஒரே தலைவர் சஜித் பிரேமதாசதான். அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. வாங்கும் சம்பளத்தை மக்களுக்கே வழங்கிவருகின்றார்.

கோட்டாபய ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பு உள்ளிட்ட பெண்களே விரட்டினர். ரணிலையும் விரட்டுவதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். அதுமட்டுமல்ல சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி கதிரையில் பெண்கள் சக்தியே அமர வைக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்” என்றார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *