வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை பின்தங்கிய நிலையில் இருப்பது போன்று தென்படுவதாக பிரபல தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தொழிநுட்பக் கல்லூரியின் அறுபதாவது ஆண்டு விழா கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
இதன்போது நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நூலின் முதலாவது பிரதியை விழாவின் பிரதம விருந்தினரான யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவிடமிருந்து பாஸ்கரன் கந்தையா பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“காரணம் இங்கே இருக்கின்ற சூழ்நிலை. அவற்றிலிருந்து மீண்டு வரவேண்டுமென்றால் மாணவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
இங்கே கற்பித்து தருவதற்கு ஏராளமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் கற்கக் கூடிய மாணவர்களுடைய மனோபாவம், அவர்களது என்ன ஓட்டம் திசைகள் மாறிச் செல்வதாகவே தோன்றுகின்றது.
எங்களுக்கென்று ஒரு பாரம்பரியம், எங்களுக்கென்று ஒரு கலாசாரம், எங்களுக்கென்று சில விழுமியங்கள் இந்த மண்ணில் இருக்கின்றது.
அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடியவர்கள் இந்த மாணவச் செல்வங்கள் தான். நீங்கள் உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
இன்று எங்கள் மத்தியில் புற்று நோயாக பரவிக் கொண்டிருக்கக் கூடிய தீய பழக்கங்களை விட்டு எங்களுக்கானதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மாணவர்களாகிய நீங்கள் கல்வியிலே சிறந்தவர்களாக, தொழிலே சிறந்தவர்களாக, தொழிலதிபர்களாக மாற்றம் பெறுகின்ற போது தான் எங்களுடைய சமூகம் ஒரு பொருளாதார ரீதியான மாற்றத்திற்கு முன்நகரும்.
கல்வியில் சிறப்பு வாய்ந்த மண்
யாழ். மாவட்டம் என்பது பெருமை வாய்ந்த மண். வடக்கு மாகாணம் என்பது கல்வியில் சிறப்பு வாய்ந்த மண்.
1960 மற்றும் 70களில் இங்கிருந்து ஏராளமான மக்கள், புத்திஜீவிகள் மலேசியா சிங்கப்பூர் மொரீசியஸ் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கல்விமான்களாக சென்று இன்றுவரையும் தமது தகமைகளை அந்தந்த நாடுகளுக்கு தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.