காவல்துறை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள், சந்தேக நபர்களை விசாரணை செய்தல், கைது செய்தல் போன்ற காணொளி காட்சிகளையோ அல்லது புகைப்படங்களையோ ஊடகங்களில் வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் தடை விதித்து காவல்துறை மா அதிபர் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பண்டாரவளை காவல்துறையினர், தனது குழந்தையை ரயிலில் விட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய தாயை கைது செய்து ஊடகங்கள் ஊடாக பரப்பியதை அடுத்து காவல்துறை மா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தர்மசங்கடத்திற்கு உள்ளாகும் சந்தேக நபர்
சந்தேகநபர் ஒருவரின் விசாரணைகள் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் சந்தேகநபர் தர்மசங்கடத்திற்கு உள்ளாவதாகவும், சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்பான காணொளி காட்சிகளை பரப்புவது அந்த நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் எனவும் காவல்துறை தலைமையகம் கூறுகிறது.
ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
காவல்துறையனரால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு ஊடக குழுக்களை அழைத்துச் செல்வதை நிறுத்துமாறு காவல் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.