யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை வைத்திருந்த சந்தேகத்தில் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்கொல்லி போதைப்பொருளை விற்பனை செய்யும் நபர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய நேற்று மாலை மாணவர்கள் தங்கியிருந்த விடுதி சோதனை செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – மணத்தறை வீதியிலுள்ள தனியார் விடுதியில் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ளனர்.
கைதான மாணவர்கள்
குறித்த 17 மாணவர்களில் 15 சிங்கள மாணவர்களும், 2 தமிழ் மாணவர்களும் உள்ளடங்குவர்.
இது தொடர்பில் விஞ்ஞானபீட பீடாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், கைதான மாணவர்களுக்கு பரீட்சை நடைபெற்று வருவதாக பீடாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டனர்.
பல்கலைக்கழக ரீதியான நடவடிக்கையை எடுக்குமாறும், மாணவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பில் ஆராயுமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.