Vijay - Favicon

சமஷ்டியே தீர்வு..! அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் அறைகூவல்


எமது மக்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாக சமஷ்டி தீர்வை அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்த குரலில், கட்சி பேதமின்றி இதயசுத்தியுடன் வலியுறுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய-இலங்கை ஒப்பம்

“நாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையை பொறுப்பேற்றிருந்த வேளையில், இலங்கை அரசாங்கத்துடனும் இந்திய அரசாங்கத்துடனும் மாகாணசபை சட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டே பல்வேறு இன்னல்களின் மத்தியில் அதனை முன்னெடுத்துச் சென்றோம்.

குறுகிய காலப்பகுதிக்குள் எமக்குக் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு பல அரிய விடயங்களைச் செய்திருந்தோம் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அன்றைய பூகோள அரசியல் நிலைமையைப் போன்றே இன்றும் ஒரு அரசியல் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அன்று நாம் அரசியல் ரீதியிலும் ஆயுத ரீதியிலும் பலம்பெற்றிருந்தோம்.

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் சக்திகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்று விரிவடைந்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பும் தமிழ் மக்களின் பாதுகாப்பும் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சமஷ்டி தீர்வு

எனவே, எமது இன்றைய அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எமது பலம், பலவீனம் என்பவற்றைக் கவனத்தில் கொண்டு, எமது மக்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாக சமஷ்டி தீர்வை அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்த குரலில் கட்சி பேதமின்றி இதயசுத்தியுடன் வலியுறுத்துவதுடன் அதனை அடைவதற்கு அனைவரும் ஓரணியில் திரண்டு ஐக்கியமாகச் செயற்பட்டு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம்” – என்றுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *