Vijay - Favicon

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி !


அடுத்த வருடத்தின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

நாட்டின் திறமையான கலைஞர்கள் அனைவரையும் இதில் இணைத்துக் கொள்ள உள்ளதாகவும், புதிய கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு லயனல் வென்ட் கலையரங்கில் நேற்று (17) பிற்பகல் நடைபெற்ற சித்திரக் கலைஞர் எச். எஸ் சரத்தின் 50 ஆவது தனிப்பட்ட ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கண்காட்சியை பார்வையிடும் சந்தர்ப்பத்தில், கண்காட்சியை பார்வையிட வந்த இரு பாடசாலை மாணவிகளால், இந்நாட்டின் கல்வி முறையை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தொகுக்கப்பட்ட திட்டமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், எச். எஸ்.சரத்துடனான எனது உறவு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்கிறது. நான் இளைஞர் விவகார அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் இருந்த காலத்தில் அவரது கண்காட்சிகளில் கலந்து கொண்டேன்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் கல்வி அமைச்சின் பணிகளில் அவரைப் பங்கேற்கவும் செய்தேன். அதன் மூலம் அவருடைய சித்திரக் கலை தொடர்பான திறமையை அடையாளம் காணும் வாய்ப்பும் கிடைத்தது.

கல்வி அமைச்சு இசுருபாயவிற்கு மாற்றப்பட்டபோது, எச். எஸ்.சரத்திடம் அமைச்சர் அலுவலகத்திற்கு ஒரு ஓவியத்தை வழங்க முடியுமா என்று அவரிடம் கேட்டேன். அன்று அவர் செலலிஹினியை சித்தரிக்கும் பெரிய ஓவியம் ஒன்றைக் கொடுத்தார்.எனக்குத் தெரிந்தவரை துரதிஷ்டவசமாக அந்த ஓவியம் இன்று அமைச்சில் இல்லை.

ஒரு நாள் பெரிய தொகைக்கு விற்கலாம் என்பதால் யாராவது அதனை வீட்டுக்கு கொண்டுபோய் வைத்திருக்கலாம். இருப்பினும், எச். எஸ்.சரத் பல்வேறு வகையான பணிகளில் பங்கேற்றார். அவரது திறமை பற்றி புதிதாகக் கூறத் தேவையில்லை. இந்தப் ஓவியங்களைப் பார்த்தாலே புரியும்.

நமது 75 ஆவது சுதந்திர தினத்தை அடுத்த ஆண்டு கொண்டாட தயாராகி வருகிறோம். சரத் போன்ற திறமையான இளம் கலைஞர்களும் உள்ளனர். சரத் அவர்களின் தலைமையில் மற்ற கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியை நடத்த நினைத்தேன்.

இந்தக் கண்காட்சியை பொருத்தமான இடத்தில் நடத்தலாம். அதன் மூலம் எச். எஸ்.சரத் போன்ற திறமையான ஓவியர்கள் நம் நாட்டில் உருவாகுவார்கள்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பு லயனல் வென்ட் கலையரங்கில் ஓவியக் கண்காட்சி நடைபெறவுள்ளது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *