தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (16) இலங்கை வந்தடைந்தார். இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சந்தித்தார்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை இலக்காகக் கொண்ட இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துதல், இலங்கையில் சுற்றுலாவை விரிவுபடுத்துதல் மற்றும் சமூகங்களுக்கிடையில் நீடித்த நல்லிணக்கத்தை அடைவதற்கு நம்பகமான உண்மையைத் தேடும் பொறிமுறையை அமைப்பதில் தென்னாபிரிக்காவின் உதவி, வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இரு மாநில தலைவர்களும் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் இரு நாட்டு சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.




