கடந்த வருடம் ஹிக்கடுவையில் இருவரை படுகொலை செய்ய ‘பூரு மூனா’ என அழைக்கப்படும் ரவிந்து சங்க டி சில்வாவுக்கு 20 இலட்சம் ரூபா ஒப்பந்தமொன்றை கையளித்ததாக கூறப்படும் 31 வயதான பெண்ணொருவர் நேற்று ஹிக்கடுவை – களுபே பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாண (தெற்கு) குற்றப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூரு மூனாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி பூரு மூனா வெளிநாடு செல்வது தடுக்கப்பட்ட போதிலும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சில காவல்துறையினர் மற்றும் பிக்குமாரின் உதவியுடன் தப்பிச்சென்றிருந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும், அவர் கடந்த 17ஆம் திகதி அவிசாவளையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
20 இலட்சம் ரூபா ஒப்பந்தம்
கடந்த வருடம் அக்டோபர் 31 ஆம் திகதியன்று நீதிமன்றில் முன்னிலையாவதற்கு, உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், மற்றுமொரு உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பில், ஹிக்கடுவை காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில்படி, இந்தக் இரட்டைக் கொலைகளை பூரு மூனா 20 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பெண், பூரு மூனாவுக்கு உந்துருளி, முச்சக்கர வண்டி, ரீ56 ரக துப்பாக்கி மற்றும் பணத்தை வழங்கி கொலைக்கு உதவி செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த பெண் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் மேலதிக விசாரணைகளுக்காக பாதாள உலக உறுப்பினரான பூரு மூனாவும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.