Vijay - Favicon

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நில தொடர்ச்சியை துண்டிக்கும் முயற்சி – இரா.சம்பந்தன்




Colombo (News 1st) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். 

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற அத்துமீறிய செயற்பாடுகள் மற்றும் திருகோணமலை மாவட்ட எல்லைகளை மாற்றுவதற்கான முயற்சிகளை சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

பல தலைமுறைகளாகவும் நூற்றாண்டுகளாகவும் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களாகவிருக்கும் நிலப்பரப்பை பாரதூரமானதொரு முறையில் மாற்றியமைக்கும் வகையில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளை மாற்றுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச உடன்படிக்கையான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் வடகோடியிலுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு திருகோணமலை மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வட மத்திய மாகாணத்திலுள்ள அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து ஒரு பெரும் நிலப்பரப்பு பதிலீடு செய்யப்படவுள்ளதென தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பெரும் நிலப்பரப்பொன்றை கிழக்கு மாகாணத்திற்குள் கொண்டுவரும் அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெரும் நிலப்பரப்பொன்றை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கும் முன்மொழிவு திருகோணமலையின் தெற்குப் பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது பாரதூரமான எதிர்வலைகளையும் உலகில் இரண்டாவது மிகச் சிறந்த துறைமுகமாக கருதப்படும் திருகோணமலை துறைமுக்திற்கு பாரதூரமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்துடன், வடக்கு மற்றும் தெற்கின் கடல்சார் எல்லைகள் ஊறுபடுவதற்கு வழிவகுக்கும் என அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களோ அல்லது இலங்கையின் அயல் நாடோ அல்லது மிக அருகில் உள்ள நாடுகளோ இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் வடக்கிலும் தெற்கிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கிடையில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை இல்லாது செய்வதே இதன் முழு நோக்கமாகும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *