கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு – பட்டிப்பளை – அருள்மிகு தாந்தாமலை முருகன் திருக்கோயில்
மலைமீது காட்சி தந்து மருள் போக்கும் வேல்முருகா
மயக்கநிலை போக்கி யெம்மைத் தெளிவுடனே வாழவிடு
முன்னேற்றப் பாதையினைக் காட்டிவிடு
தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய்
உமையவளின் இளமகனாய் வந்துதித்த வேல்முருகா
மனவுறுதி தந்தெம்மைத் தெளிவுடனே வாழவிடு
மேதினியில் நிம்மதியை உறுதி செய்ய வந்துவிடு
தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய்
துன்பங்கள் போக்கியெம்மை அரவணைக்கும் வேல்முருகா
துணையிருந்து எம்மையென்றும் தெளிவுடனே வாழவிடு
தொல்லையில்லா நிம்மதியின் உறுதியை நீ செய்துவிடு
தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய்
வாட்டம் போக்கியெம்மை வாழவைக்கும் வேல்முருகா
ஆற்றல் தந்தெம்மை தெளிவுடனே வாழவிடு
பாரினிலே நம்முரிமை பங்கமின்றி காத்துவிடு
தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய்
கைகூப்பித் தொழும் எமக்கும் கைகொடுக்கும் வேல்முருகா
கவலையின்றி எம்மையென்றும் தெளிவுடனே வாழவிடு
கௌரவமாய் வாழும்வழி நாமடைய உறுதியை நீ செய்துவிடு
தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய்
உளமுருகித் தொழுவோர்க்கு உடன் அருளும் வேல்முருகா
உண்மை நெறி பிறழாது எமை என்றும் வாழவிடு
உற்றதுணை தப்பாமல் நாமடைய உறுதியை நீ தந்துவிடு
தாந்தாமலை கோயில் கொண்ட மால்மருகா எமக்கருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
The post மட்டக்களப்பு, பட்டிருப்பு – பட்டிப்பளை – அருள்மிகு தாந்தாமலை முருகன் திருக்கோயில் appeared first on Malayagam.lk.