வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம் உடப்பூர்- அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோயில்
கொடும் புலியை வாகனமாய்க் கொண்டவரே ஐயப்பா
கொடுமை போக்கியெம்மை வாழவைக்க வேண்டுமப்பா
துன்பங்கள் தடுத்தெம்மைக் காத்திடவே வந்திடுவாய்
உடப்பூரில் கோயில் கொண்ட ஐயப்ப சுவாமியே நீயே துணை
பம்பை நதிக்கரையில் வீற்றிருக்கும் ஐயப்பா
பங்கமில்லா பெருவாழ்வை தந்து எம்மை வாழவைக்க வேண்டுமப்பா
நல்லருளைத் தந்தெம்மை அணைத்திடவே வந்திடுவாய்
உடப்பூரில் கோயில் கொண்ட ஐயப்ப சுவாமியே நீயே துணை
பதினெட்டுப் படிகளின் மேலமர்ந்த ஐயப்பா
பாரெங்கும் வளமளித்து வாழ வைக்க வேண்டுமப்பா
பரிதவிக்கும் நிலையகற்றி நிம்மதியைத் தந்திடவே வந்திடுவாய்
உடப்பூரில் கோயில் கொண்ட ஐயப்ப சுவாமியே நீயே துணை
துணிவு கொண்ட மனம் தரும் தீரனே ஐயப்பா
துணையிருந்து ஆதரித்து அருளிடவே வேண்டுமப்பா
துன்பங்கள் அண்டாமல் தடுத்திடவே வந்திடுவாய்
உடப்பூரில் கோயில் கொண்ட ஐயப்ப சுவாமியே நீயே துணை
மேற்கிலங்கை வந்துறைந்து அருள் வழங்கும் ஐயப்பா
மேன்மை மிகு நல்வாழ்வை எமக்களிக்க வேண்டுமப்பா
மோதவரும் பகைமைகளை விரட்டிடவே வந்திடுவாய்
உடப்பூரில் கோயில் கொண்ட ஐயப்ப சுவாமியே நீயே துணை
அச்சம் அகற்றி நல்லறிவு தரும் ஐயப்பா
ஆறுதலைத் தந்தெம்மைக் காத்தருள வேண்டுமப்பா
அடக்கவரும் தீயவரைத் தடுத்திடவே வந்திடுவாய்
உடப்பூரில் கோயில் கொண்ட ஐயப்ப சுவாமியே நீயே துணை.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.