இன்று திங்கட்கிழமை காலை 7.20 மணியளவில் பசறை 13 ம் கட்டை பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயது குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
ஹொப்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் குறித்த நபர் இன்று காலை பாடசாலைக்கு செல்ல தயாராகி, தனது காரை வீட்டிலிருந்து வெளியே எடுத்த வேளை கார் 50 அடி பள்ளத்தில் இருந்த பசறை-பிபில பிரதான வீதியில் விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மூன்று வருடங்களுக்கு முன் இதே பகுதியில், இதே போன்று காலை வேளையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா