மத்திய மாகாணம் – கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் திருக்கோயில்
நாவல் நகரமர்ந்து அருள்வழங்கும் கதிரேசா
நமது நலன் காத்திடவே உடனிருந்து காவல் செய்வாய்
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து நிறை வாழ்வைத் தந்திடைய்யா
நாவலப்பிட்டியில் கோயில் கொண்ட கதிரேசா எம்குரலைக் கேட்டிடைய்யா
மலைசூழ்ந்த நன்னகரில் வீற்றிருக்கும் கதிரேசா
மனிதகுல நலன்கள் காத்திடவே அருள் செய்வாய்
மதிபிறழா பெருமனத்தை எமக்கு நீ தந்திடைய்யா
நாவலப்பிட்டியில் கோயில் கொண்ட கதிரேசா எம்குரலைக் கேட்டிடைய்யா
சிவனாரின் திருமகனாய் பெருமை கொண்ட கதிரேசா
சிறந்த நல்ல வாழ்வளிக்க உடனிருந்து வழியைச் செய்வாய்
சீர்மைமிகு உயர்வாழ்வை எமக்கு நீ தந்திடைய்யா
நாவலப்பிட்டியில் கோயில் கொண்ட கதிரேசா எம்குரலைக் கேட்டிடைய்யா
சேவற் கொடி தாங்கி உலகாளும் கதிரேசா
சேருமிடம் சிறப்படைய ஏற்றவழி எமக்குச் செய்வாய்
சோர்வில்லா மனநிலையை எமக்கு நீ தந்திடைய்யா
நாவலப்பிட்டியில் கோயில் கொண்ட கதிரேசா எம்குரலைக் கேட்டிடைய்யா
சூரனை அடக்கி அறம் காத்த கதிரேசா
சூழ்நிலைகள் நல்லவையாய் அமைய ஏற்றவழி செய்வாய்
சுற்றம் சூழ சீர்பெறவே உரியவற்றைத் தந்திடைய்யா
நாவலப்பிட்டியில் கோயில் கொண்ட கதிரேசா எம்குரலைக் கேட்டிடைய்யா
செந்தமிழின் காவலனாய் புகழ் கொண்ட கதிரேசா
சிந்தையிலே நல்லுணர்வு பெருகிடவே வழிசெய்வாய்
சிதறாத நல்லறிவை என்றும் நீ தந்திடைய்யா
நாவலப்பிட்டியில் கோயில் கொண்ட கதிரேசா எம்குரலைக் கேட்டிடைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.