Colombo (News 1st) கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம், கொலன்னாவ பகுதியில் 07 கிராம் 945 மில்லி கிராம் ஹெரோயினுடன் மறைந்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி மற்றும் 02 ரவைகளும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இதனை தொடர்ந்து குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு நிதிப்பங்களிப்பை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபரிடமிருந்து 06 கிராம் 720 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைத்தோட்டம் மற்றும் குணசிங்கபுர பகுதிகளைச் சேர்ந்த 26 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று(20) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதி, கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது.