Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சங்கங்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் பரிந்துரைக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை என ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.
இன்று பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகள் உரியவாறு இடம்பெறுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் 265 இலங்கை வங்கிக் கிளைகளும், 272 மக்கள் வங்கிக் கிளைகளும் செயற்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வழமையான முறையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக 300 பெட்ரோல் மற்றும் டீசல் பௌசர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தாம் எவ்வித தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை எனவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இலங்கை மின்சார சபையின் நிதி தொடர்பான அதிகாரிகள் சங்கத்தினூடாக சபையின் பொது முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.