Vijay - Favicon

தினேஷ் ஷாப்டரின் சடலம் மீது முழுமையான பகுப்பாய்வு




மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீது முழுமையான பகுப்பாய்வு பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

ஐவரடங்கிய விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவினூடாக காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இந்த பகுப்பாய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அசேல மென்டிஸ், ருஹுனு பல்கலைக்கழகத்தின் சட்ட மருத்துவ பீட பேராசிரியர் யூ.சி.பி.பெரேரா, பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட மருத்துவ பீட பேராசிரியர் தினேஷ் பெர்ணான்டோ, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரி பி.ஆர் ருவன்புர மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரி எம்.சிவசுப்ரமணியம் ஆகியோரே குறித்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாம் கட்ட பகுப்பாய்வுக்காக தினேஷ் ஷாப்டரின் சடலம் நேற்று(25) தோண்டி எடுக்கப்பட்டது.

பொரளை பொது மயானத்தில் தனது காரில் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டார்.

அதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றிரவு உயிரிழந்தார்.

இலங்கை வர்த்தக துறையில் மிக பிரபல்யமானவர்களில் ஒருவரான தினேஷ் ஷாப்டரின் மரணம் நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தங்குஸ்நூல் போன்ற நூலால் கழுத்து நெறிப்பட்டமையால் உயிரிழந்ததாக தினேஷ் ஷாப்டரின் ஆரம்ப கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நச்சுயியல் அறிக்கையில் மற்றுமொரு விடயம் குறிப்பிடப்பட்டிருந்ததால் தினேஷ் ஷாப்டரின் சடலம்  மீது முழுமையான உடற்கூற்று பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என சட்ட மருத்துவ அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

சைனைட் நச்சுப் பதார்த்தம் உடலில் கலந்ததால் அவர் உயிரிழந்திருப்பதாக நச்சுயியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைனட் இடப்பட்ட உணவை தினேஷ் ஷாப்டர் உட்கொண்டுள்ளதாகவும் அவரின் வயிறு மற்றும் குருதியிலிருந்து சைனைட் நச்சுப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கைகளில் முரண்பாடுகள் காணப்படுவதாக தினேஷ் ஷாப்டரின் குடும்பம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார். 

தினேஷ் ஷாப்டரின் சடலம் மீது முழுமையான பகுப்பாய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அமைய கொழும்பு பல்கலைக்கழகத்தின்  சட்ட மருத்துவ துறையின் பேராசிரியர் அசேல மென்டிஸின் தலைமையிலான ஐவரடங்கிய விசேட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *