Vijay - Favicon

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விடுதலை




Colombo (News 1st) இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 06ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் இன்று(17) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் தடை செய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையில் மீன்பிடித்தமை ஆகிய 02 குற்றச்சாட்டுகள் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினரால் சுமத்தப்பட்டிருந்தது.

02 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடம் வீதம் 02 வருட சிறைத்தண்டனை விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்களை மிரிஹானை முகாமிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளவுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்கியுள்ள 14 வயதான சிறுவன், இன்று மன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இவரை உறவினர்கள் ஊடாக மிரிஹானை முகாமுக்கு அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இந்திய படகின் உரிமையாளரும் மன்றில் ஆஜரானதுடன் தமது படகை விடுவிக்குமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தார்.

படகின் உரிமையாளரை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், அடுத்த வருடம் ஜூலை மாதம் 13ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு மற்றைய படகின் உரிமையாளருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *