Colombo (News 1st) 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த போது, சுங்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு, அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் கோரிக்கை கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினருக்கான ஒழுக்க விதிகளை அலி சப்ரி ரஹீம் முழுமையாக மீறியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியால் கொண்டுவரப்படும் கட்டளைச் சட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களே, குறித்த சட்டங்களை மீறுவதனூடாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும், பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சீர்குலைக்கப்படுவதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.