இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய (IMF) செயற்குழுவின் அனுமதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.
அவ்வுரையில் ஜனாதிபதி பின்வரும் விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கையுடனான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான இணக்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று அனுமதி வழங்கியது.
- இதன் மூலம் எமது கடன்களை மறுசீரமைத்துக் கொள்வதற்கான சக்தி எமக்குள்ளது என்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
- இலங்கை வங்குரோத்து நாடு என்ற நிலை இனி இருக்காது. இதனால் வழமையான கொடுக்கல் வாங்கல்களை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
- அதேபோல் எமது வெளிநாட்டு அந்நியச் செலாவணி அதிகரிக்க அதிகரிக்க எமது இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை கிரமமாக நீக்க முடியும்.
- அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், சுற்றலாத்துறைக்குத் தேவைாயன பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முதல் சுற்றில் வழங்கப்படும்.
- இந்த இணக்கத்திற்கு அமைய நாம் இங்கிருந்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
- எமக்கு இந்த இணக்கப்பாட்டை எட்டுவதற்கு பங்களிப்புச் செய்த அனைத்து நாடுகளுக்கும், ஐ.எம்.எப், உலக வங்கி உயர் அதிகாரிகள் இருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
- இது குறித்து முழுமையான உரையொன்றை பாராளுமன்றில் நாளை ஆற்றுவேன், அத்துடன் இந்த ஒப்பந்தத்தையும் பாராளுமன்றில் சமர்ப்பிப்பேன்.