Vijay - Favicon

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சர்வாதிகார ஆட்சியையே முன்னெடுத்துவருகின்றார். அதன் தாக்கம் இன்று ஜெனிவாவில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது – இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு.


(க.கிஷாந்தன்)

கடுமையானவர் எனக் கருதப்பட்ட கோட்டாபய ராஜபக்சகூட சர்வாதிகாரத்தை கையில் எடுக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சர்வாதிகார ஆட்சியையே முன்னெடுத்து வருகின்றார். அதன் தாக்கம் இன்று ஜெனிவாவில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.“ – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்த் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

மஸ்கெலியா பகுதியில் நேற்று (18.09.2022) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த சந்திப்பில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ராஜாராம், மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ்குமார் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ எமது நாடு வங்குரோத்து நிலைமையிலேயே இருக்கின்றது. டொலர் வருமானம் இல்லை. தான்தான் என்ற மமதையுடன் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை முன்னெடுத்ததாலும், தன்னிச்சையான முடிவுகளாலுமே நாட்டுக்கு: இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இறுதியில் நாட்டைவிட்டே ஓட வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் ராஜபக்ச  தரப்பின் வாக்குகளால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். அவரின் அண்மையகால செயற்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறை கையாளப்பட்டது. அதன் தாக்கம் இன்று ஜெனிவாவில் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ச தவறான தீர்மானங்களை எடுத்தார். சர்வாதிகாரத்தை கையில் எடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகார ஆட்சியை நடத்திவருகின்றார். இதனால் நாட்டு மக்கள் துன்பப்படுகின்றது.  நாட்டில் வாழ்க்கைச்செலவு உச்சம் தொட்டுள்ளது.

அதேவேளை, மஸ்கெலியா பகுதியில் தோட்டக் கம்பனிகளின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. தீபாவளிக்கான முற்கொடுப்பனவை வழங்க முடியாது என பல அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றது. அப்பகுதியில் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனவே, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். மாறாக நாம் பிளவுபட்டு நின்றால் அது நிர்வாகத்துக்கே சாதகமாக அமையும். எமது பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவாவில்கூட பேசப்படுகின்றது. இதனை நாம், முன்னேற்றத்துக்கான களமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சீனாவிடம் பெருந்தொகை கடன் வாங்கியே தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. அந்த கடனை செலுத்த எம்மிடம் இருந்தே இன்று பணம் அறிவிடப்படுகின்றது.” – என்றார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *