Vijay - Favicon

ஜனாதிபதி மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பில் கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு




Colombo (News 1st) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடியே 88 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் ஜனாதிபதி மாளிகைக்கு கிடைத்த விதம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு செய்து, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையை கடந்த ஜூன் 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றிய போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் படுக்கை அறைக்குள் இருந்து போராட்டக்காரர்களால் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கோட்டை பிரதம நீதவான் திலின கமகே விசாரணைக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, மிரிஹானையிலுள்ள அவரின் பிரத்தியேக வீட்டில் தற்போது வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

அந்த வீட்டில் அவர் இல்லையென்றால், அவர் தங்கும் வீட்டிற்கு சென்று வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பணத்தை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் வழங்குமாறு, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான சாகர லியனகேவிற்கு தொலைபேசியூடாக அறிவித்துள்ளமை விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் D.S.விக்ரமசிங்க நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 59 ஆவது சந்தேகநபராக சட்டத்தரணி நுவன் போபகே பெயரிடப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கோட்டை பிரதம நீதவான் நீதிமன்றம்,  வழக்கின் சந்தேகநபராக சட்டத்தரணி நுவன் போபகேவை பெயரிட்டுள்ளது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *